இந்திய ஜூனியர் ஆக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் ஜெர்மனி சுற்றுப்பயணம்
|இந்திய ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியினர் ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
பெங்களூரு,
ஜெர்மனியில் 4 நாடுகளுக்கு இடையிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி தொடர் நடைபெற உள்ளது. அதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடருக்கான இந்திய ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் பெங்களூருவில் இருந்து இன்று புறப்பட்டு சென்றனர்.
இந்திய ஜூனியர் ஆண்கள் அணிக்கு விஷ்ணுகாந்த் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். துணை கேப்டனாக பாபி சிங் தாமி நியமிக்கப்பட்டு உள்ளார். ஆண்கள் அணிக்கான போட்டிகள் வரும் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்திய ஜூனியர் பெண்கள் அணிக்கு பிரீத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். துணை கேப்டனாக ருதுஜா தாதாஸோ பிசல் நியமிக்கப்பட்டு உள்ளார். பெண்கள் அணிக்கான போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இந்த தொடர் குறித்து ஜூனியர் ஆண்கள் அணி கேப்டன் விஷ்ணுகாந்த் சிங் பேசுகையில்,'இந்த தொடரை ஆவலாக எதிர் நோக்கியுள்ளோம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள ஜூனியர் ஆக்கி ஆண்கள் உலகக்கோப்பைக்கு முன்னதாக எங்களை சோதனை செய்ய இந்த தொடர் உதவும். இந்த தொடர் மூலம் அணியின் பலம் மற்றும் பலவீனத்தை அறிய முடியும். இதற்கு நாங்கள் சிறந்த முறையில் தயாராகி உள்ளோம். அதனால் தொடரில் சிறந்த முடிவை எதிர்பார்க்கிறோம்' என கூறியுள்ளார்.
பெண்கள் அணி கேப்டன் பிரீத்தி கூறுகையில்,''பயிற்சி களத்தில் நாங்கள் சிறந்த முறையில் தயாராகி உள்ளோம். உலகக்கோப்பைக்கு முன்பாக வரும் தொடர் என்பதால் இதனை சிறந்த முறையில் முடிக்க முயற்சிப்போம். வீராங்கனைகளின் திறமைகளை அடையாளம் காண இந்த தொடர் உதவும்' என கூறியுள்ளார்.
சர்வதேச ஆக்கி ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் சிலி நாட்டில் வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.