ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி: அரையிறுதியில் இந்தியா- தென்கொரியா இன்று மோதல்
|ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.
ஹூலுன்பியர்,
6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்தியா (15 புள்ளி), பாகிஸ்தான் (8), சீனா (6), தென்கொரியா (6) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இன்று நடக்கும் ஒரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா 5 லீக்கிலும் மகத்தான வெற்றிகளை பெற்றது.
அரையிறுதி போட்டி தொடர்பாக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில், 'ஒலிம்பிக் முடிந்ததும் பெரிய அளவில் ஓய்வு எடுக்கவில்லை. உடனே இந்த போட்டிக்கு வந்து விட்டோம். ஆனாலும் எங்கள் அணி வீரர்கள் இதுவரை விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தென்கொரியாவை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். கடினமான அணி. அவர்களின் தற்காப்பு ஆட்டம் நன்றாக இருக்கும். தாக்குதலில் வேகமாக ஆடக்கூடியவர்கள்.' என்றார்.