ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி; தொடர் நாயகன் விருதை வென்ற ஹர்மன்பிரீத் சிங்
|இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஹூலுன்பியர் ,
6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீனா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியின் ஜுக்ராஜ் சிங் ஆட்டத்தின் 50 நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து பதில் கோல் அடிக்க சீனா கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி தொடரின் தொடர் நாயகன் விருதை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் வென்றார். அவர் இந்த தொடரில் மொத்தம் 7 கோல்கள் அடித்துள்ளார். மேலும், சீனாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் கோல் அடிக்க உதவி செய்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி விருது வென்றவர்கள் விவரம்;
தொடரின் அதிக கோல் அடித்தவர் - யாங் ஜிஹுன் (9 கோல்கள்) - கொரியா
தொடரின் நம்பிக்கைக்குரிய கோல்கீப்பர் - கிம் ஜேஹான் - கொரியா
தொடரின் சிறந்த கோல்கீப்பர் - வாங் கையு - சீனா
தொடரின் ரைசிங் ஸ்டார் - ஹனான் ஷாஹித் - பாகிஸ்தான்
தொடரின் சிறந்த வீரர் - ஹர்மன்பிரீத் சிங் - இந்தியா