ஜெர்மனி ஆக்கித் தொடர்; இந்திய ஆண்கள் ஜூனியர் அணி அறிவிப்பு
|ஜெர்மனி சுற்றுப்பயனத்திற்கான 20 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஜூனியர் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி,
ஜெர்மனியில் 4 நாடுகளுக்கு இடையிலான ஆண்கள் ஜூனியர் ஆக்கித் தொடர் நடைபெற உள்ளது. தொடரில் இந்தியா,ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் தொடரை நடத்தும் ஜெர்மனி ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடர் அடுத்த மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் வரவிருக்கும் ஆண்கள் ஜூனியர் உலக கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின்,இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அணிகளுடன் இந்தியா மோத உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்தியா முயற்சிக்கும்.
இந்நிலையில் இந்த சுற்றுப்பயனத்திற்கான 20 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அணிக்கு உத்தம் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். துணைக் கேப்டன் பதவி பாபி சிங் தாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் சிஆர் குமார் கூறுகையில்,'நாங்கள் வரவிருக்கும் உலக கோப்பை தொடருக்கு நல்ல முறையில் தயாராகி உள்ளோம். சில இடங்களில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதனை மேம்படுத்த இந்தத் தொடர் உதவிகரமாக இருக்கும் . இந்தத் தொடரில் வெற்றி பெற கடுமையாக முயற்சிப்போம்'என்று கூறியுள்ளார்.
இந்திய அணி பின்வருமாறு;
உத்தம் சிங்(கேப்டன்),பாபி சிங் தாமி (துணைகேப்டன்),மொகித்,ரன்விஜய் சிங் யாதவ்,சர்தா நந்த் திவாரி,ரோகித்,அமந்தீப் லக்ரா,அமிர் அலி,வாரிபம் நிரஜ் குமார் சிங்,யோகிம்பர் ராவத், புவன்னா, விஷ்னுகாந்த் சிங்,ரஜிந்தர் சிங்,அமந்தீப்,சுனித் லக்ரா,சேத்தன் சர்மா,அமித் குமார் யாதவ்,அரிஜீத் சிங்,அங்கத் பிர் சிங்,சுதீப் சிர்மகோ.
ஆண்கள் ஜூனியர் உலக கோப்பை ஆக்கித் தொடர் டிசம்பர் 5 முதல் 16ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.