ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் வெற்றி
|தற்போது ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 3 புள்ளியுடன் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் நாளை இத்தாலியுடன் மோதுகிறது.
ராஞ்சி,
ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்றில் இந்திய அணி நியூசிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பெண்கள் ஆக்கி தகுதி சுற்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறும்.
இதில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள சவிதா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக்கில் 0-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோற்றது. இதனால் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இந்திய அணி தனது 2-வது லீக்கில் நேற்றிரவு நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே இந்தியாவின் சங்கீதா குமாரி கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார். 9-வது நிமிடத்தில் நியூசிலாந்தின் மேகன் ஹல் கோல் திருப்பி சமனுக்கு கொண்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து மேலும் ஆக்ரோஷமாக ஆடிய இந்திய வீராங்கனைகள் எதிரணியின் எல்லைக்குள் ஊடுருவி அடுத்தடுத்து இரு கோல் போட்டனர். 12-வது நிமிடத்தில் உதிதா பெனால்டி கார்னர் வாய்ப்பிலும், 14-வது நிமிடத்தில் டங்டங் பியூட்டியும் கோல் அடித்து இந்தியாவுக்கு வலுவான முன்னிலை ஏற்படுத்தி தந்தனர். பிற்பாதியில் கடுமையாக முயன்றும் கோல் ஏதும் அடிக்கவில்லை.
முடிவில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை ருசித்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை தோற்கடித்து 2-வது வெற்றியை பதிவு செய்தது.
'ஏ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் சிலி 6-0 என்ற கோல் கணக்கில் செக்குடியரசை வெளியேற்றியது. ஜெர்மனி-ஜப்பான் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' வில் முடிந்தது.
தற்போது ஒரு வெற்றி, ஒரு தோல்வி என 3 புள்ளியுடன் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) இத்தாலியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும். மற்றொரு ஆட்டத்தில் 6 புள்ளியுடன் உள்ள அமெரிக்கா, நியூசிலாந்து அணியை (3 புள்ளி) எதிர்கொள்கிறது.