ஆசிய ஆக்கி போட்டி சென்னையில் ஆகஸ்டு மாதம் நடைபெறும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
|ஆசிய ஆக்கி போட்டி சென்னையில் ஆகஸ்டு மாதம் நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் தொகைக்கு ஏற்ப மானிய கோரிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறேன். அறிவிப்புகள் அனைத்தையும் சாத்தியப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மாநிலம் முழுவதும் புதிய விளையாட்டு உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதுடன், ஏற்கனவே உள்ள வசதிகளை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சீரும் சிறப்புமாக நடத்தியது போல் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த ஆர்வமாக இருக்கிறோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.) உதவியுடன் ஆசிய ஆக்கி போட்டி சென்னையில் ஆகஸ்டு மாதம் இறுதியில் நடக்கிறது. அடுத்த ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை நடத்த அனுமதி கேட்டு இருக்கிறோம். இதே போல் சென்னையில் ஆசிய பீச் வாலிபால் சாம்பியன்ஷிப்பை நடத்தவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தால் சர்வதேச போட்டிகளை நடத்த தயாராக உள்ளோம்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரூ.3 கோடி செலவில் தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையங்கள் மதுரை மற்றும் நீலகிரியிலும் உருவாக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களின் செயல் திறனை மேம்படுத்த தொழில்நுட்ப ரீதியான நுணுக்கங்களையும், காயத்தில் இருந்து மீளுவது எப்படி? என்பது குறித்த டாக்டர்களின் ஆலோசனைகளையும் இந்த மையத்தில் பெற முடியும். தடகளம், டென்னிஸ், ஆக்கி ஆகியவற்றில் உயர் பயிற்சியை தமிழக வீரர், வீராங்கனைகள் பெறுவதற்கு வசதியாக வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மாநிலத்தின் விளையாட்டு மேம்பாட்டுக்காக பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்புடன் 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை' அமைக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவராக முதல்-அமைச்சர் இருப்பார். தூதுவராக செயல்பட சம்மதம் தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த அறக்கட்டளையின் தொடக்க விழா நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெறும்.
ஒரு சில தமிழ்நாடு விளையாட்டு சங்கங்களில் பிளவு இருப்பது எங்களது கவனத்துக்கு வந்து இருக்கிறது. இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பில் உள்ள சில நடைமுறை சிக்கல்கள் களையப்படும். விளையாட்டு வீரர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.