ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
|ஆசிய விளையாட்டில் நேற்று நடந்த ஆக்கியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி, தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஹாங்சோவ்,
ஆசிய விளையாட்டில் நேற்று நடந்த ஆக்கியில் ஆண்கள் பிரிவின் முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியில் ஹர்திக் சிங் (5-வது நிமிடம்), மன்தீப் சிங் (11-வது நிமிடம்), லலித்குமார் உபாத்யாய் (15-வது நிமிடம்), அமித் ரோஹிதாஸ் (24-வது நிமிடம்), அபிஷேக் (54-வது நிமிடம்) தலா ஒரு கோல் போட்டனர். தென்கொரியா தரப்பில் மன்ஜாய் ஜூங் (17, 20, 42-வது நிமிடம்) 'ஹாட்ரிக்' கோலடித்தார்.
மற்றொரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஜப்பான் 3-2 என்ற கோல் கணக்கில் சீனாவை சாய்த்து இறுதிப்போட்டியை எட்டியது. நாளை நடைபெறும் இறுதிசுற்றில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். லீக் சுற்றில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்கள் பிரிவில் இன்று நடைபெறும் அரைஇறுதியில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன.