< Back
ஹாக்கி
ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பான் அணியிடம் இந்தியா தோல்வி

கோப்புப்படம் 

ஹாக்கி

ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பான் அணியிடம் இந்தியா தோல்வி

தினத்தந்தி
|
25 May 2022 1:45 AM IST

11-வது ஆசிய கோப்பை ஆக்கி தொடர் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.

ஜகார்த்தா,

11-வது ஆசிய கோப்பை ஆக்கி தொடர் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 2-வது நாளான நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 24-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜப்பான் வீரர் கென் நகாயோஷி கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் கோசி கவாப், இந்திய பின்கள வீரர்களை லாவகமாக ஏமாற்றி பந்தை கோல் வலைக்குள் திணித்து தங்களது முன்னிலையை அதிகரித்தார். 45-வது நிமிடத்தில் இந்திய வீரர் பவான் ராஜ்பார் பதில் கோல் திருப்பினார். தொடர்ந்து 49-வது நிமிடத்தில் ஜப்பானின் ரோமா ஓகாவும், 50-வது நிமிடத்தில் இந்தியாவின் உத்தம் சிங்கும் கோல் போட்டனர்.

கடைசி கட்டத்தில் இந்தியாவின் எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவிய ஜப்பான் வீரர்கள் கோஜி யமாசகி 54-வது நிமிடத்திலும், கோசி கவாப் 56-வது நிமிடத்திலும் கோல் அடித்து நிலைகுலைய வைத்தனர். முடிவில் ஜப்பான் 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சாய்த்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்தது.

தனது தொடக்க லீக்கில் பாகிஸ்தானுடன் 'டிரா' கண்ட இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நாளை இந்தோனேசியாவை (மாலை 5 மணி) எதிர்கொள்கிறது. இதில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 13-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை ஊதித் தள்ளியது. 'பி' பிரிவில் நடந்த ஆட்டங்களில் வங்காளதேச அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஓமனையும், மலேசியா 5-4 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவையும் வீழ்த்தியது.

மேலும் செய்திகள்