ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; சவாலை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயாராக உள்ளோம் - ஹர்மன்பிரீத் சிங்
|8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் இன்று தொடங்குகிறது.
ஹூலுன்பியர்,
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டி தொடர் குறித்து இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது,
கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி, அதைத் தொடர்ந்து நடந்த ஆசிய விளையாட்டுக்கு சரியான உத்வேகத்தை தந்தது. தொடர்ந்து ஒலிம்பிக்கிலும் பங்கேற்று மீண்டும் பதக்க மேடையில் ஏறினோம்.
இந்த முறையும் பட்டத்தை வென்று லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்கான பயணத்தை தொடங்க விரும்புகிறோம். பாரீஸ் ஒலிம்பிக்கில் விளையாடிய வீரர்களில் 10 பேர் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் சில இளம் வீரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை பார்ப்போம். தரவரிசை புள்ளியை வலுப்படுத்த இந்த தொடர் எங்களுக்கு முக்கியமானது. சவாலை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.