< Back
ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இந்தியா

தினத்தந்தி
|
8 Aug 2023 4:17 AM IST

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியின் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா 3-வது வெற்றியுடன் அரைஇறுதிக்குள் நுழைந்தது.

சென்னை,

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இதில் நேற்று மாலை நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் ஜப்பான்-மலேசியா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மலேசிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை துவம்சம் செய்தது. மலேசியா அணியில் நஜ்மி ஜஸ்லான் பெனால்டி கார்னர் வாய்ப்பில் 13-வது நிமிடத்திலும், அசுன் ஹசன் 37-வது நிமிடத்திலும், ஷில்லோ சில்வெரிஸ் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கடைசி நிமிடத்தில் ஜப்பான் அணி வீரர் தகுமா நிவா பதில் கோல் திருப்பினார்.

மலேசியா, பாகிஸ்தான் வெற்றி

4-வது ஆட்டத்தில் ஆடிய மலேசிய அணி 3-வது வெற்றியை பதிவு செய்ததுடன் அரைஇறுதியையும் உறுதி செய்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய ஜப்பானுக்கு இது 2-வது தோல்வியாகும். இதனால் அந்த அணியின் அடுத்து சுற்று வாய்ப்பு மங்கியது.

தொடர்ந்து நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, சீனாவை சந்தித்தது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது கான் 20-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோலடித்தார். இதன் பின்னர்தாக்குதலை தீவிரப்படுத்திய சீனாவுக்கு 33-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஜிஷெங் கோலாக்கி சமநிலையை ஏற்படுத்தினார்.

39-வது நிமிடத்தில் அப்ராஸ் பீல்டு கோல் போட்டு பாகிஸ்தானுக்கு முன்னிலை தேடிக்கொடுத்தார். இந்த முன்னிலையை அந்த அணியினர் கடைசி வரை தக்கவைத்து கொண்டனர். முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை பதம் பார்த்தது.

இதன் மூலம் இந்த தொடரில் முதல் வெற்றியை ருசித்த பாகிஸ்தான் அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. அந்த அணி முந்தைய 2 ஆட்டங்களில் டிராவும், ஒரு ஆட்டத்தில் தோல்வியும் கண்டு இருந்தது. அதே சமயம் 3-வது தோல்வியை தழுவிய சீனா அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

அரைஇறுதியில் இந்தியா

இரவில் நடந்த மற்றொரு திரில்லிங்கான ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை தோற்கடித்தது. இந்திய அணியில் நிலகண்டா ஷர்மா (6-வது நிமிடம்), கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (23-வது நிமிடம்), மன்தீப்சிங் (33-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். இந்தியாவுக்கு மேலும் ஒரு கோல் கிடைத்திருக்க வேண்டியது. 47-வது நிமிடத்தில் பொன்னான பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் வீணடித்தார்.

தென்கொரியா தரப்பில் கிம் சங்யுன் (12-வது நிமிடம்), ஜிஹன் யாங் (58-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். 25-வது நிமிடத்தில் அந்த அணியின் ஷாட்டை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சூப்பராக தடுத்து காப்பாற்றினார். அத்துடன் தென்கொரியாவுக்கு கிடைத்த 11 பெனால்டி கார்னரில் ஒன்றை மட்டுமே கோலாக்கியது அவர்களுக்கு பின்னடைவாக அமைந்தது.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா 3 வெற்றி, ஒரு டிரா என்று 10 புள்ளிகளுடன் கம்பீரமாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. 4-வது லீக்கில் ஆடி முதல் தோல்வியை சந்தித்த தென்கொரியாவும் (5 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

இந்த ஆக்கி திருவிழாவில் இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் ஜப்பான்-சீனா (மாலை 4 மணி), மலேசியா-தென்கொரியா (மாலை 6.15 மணி), இந்தியா-பாகிஸ்தான் (இரவு 8.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

திடீர் சத்தத்தால் பரபரப்பு

இந்தியா- தென்கொரியா ஆட்டம் நடந்து கொண்டிருந்த போது இரவு 10.10 மணி அளவில் கேலரியின் வலது ஓரத்தின் பின்பகுதியில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விசாரித்த போது, குளிர்பான கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் உள்ள கம்ப்ரசர் வெடித்தது தெரியவந்தது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

மேலும் செய்திகள்