< Back
ஹாக்கி
முதலாவது டிவிசன் ஆக்கி லீக்: தொடக்க ஆட்டத்தில் மின்வாரியம் வெற்றி
ஹாக்கி

முதலாவது டிவிசன் ஆக்கி லீக்: தொடக்க ஆட்டத்தில் மின்வாரியம் வெற்றி

தினத்தந்தி
|
17 Nov 2022 3:14 AM IST

முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மின்வாரியம் அணி வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 34 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் தொடக்க லீக் ஆட்டத்தில் மின்வாரியம் 5-2 என்ற கோல் கணக்கில் செயின்ட் ஜார்ஜ் கிளப்பை தோற்கடித்தது. மின்வாரிய அணியில் சுரேஷ் குமார் 2 கோலும், பாலமுருகன், ஸ்ரீதர், செல்வகுமரன் தலா ஒரு கோலும் அடித்தனர். செயின்ட் ஜார்ஜ் கிளப் தரப்பில் ஹரி ஷிவார், இஸ்ரேல் தலா ஒரு கோல் திருப்பினர். மற்றொரு ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் ஜெய்ஹிந்த் கிளப்பை சாய்த்தது. ஸ்போர்ட்டிங் பிரதர்ஸ் அணியில் ஜெய்கணேஷ், தேவராஜ், ஷங்கர், மகேஷ் குமார் தலா ஒரு கோல் அடித்தனர். ஜெய் ஹிந்த் கிளப் தரப்பில் முகமது பயாஸ் ஒரு கோல் திருப்பினார்.

இன்னொரு ஆட்டத்தில் மெட்ராஸ் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் 5-0 என்ற கோல் கணக்கில் கோட்டூர் புல் மூன் அணியை வென்றது. நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியில் கெய்த் பெர்லி, நெவில் குளோனி, கார்ல் மோசஸ், கெவின் பெர்லி, சார்லஸ் லாஸ்ரோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் யுனிவர்சல் கிளப்-அசோக் லேலண்ட் (பிற்பகல் 2 மணி), திருமால் கிளப்-தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம்(பிற்பகல் 3 மணி), சேப்பாக் யங்ஸ்டர்-அண்ணா நினைவு கிளப் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்