ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு
|தகுதி சுற்று போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஜனவரி 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது.
ராஞ்சியில் நடக்க உள்ள ஒலிம்பிக் தகுதிசுற்று போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி சவிதா தலைமையில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2024-ம் ஆண்டில் ஜூலை, ஆகஸ்டில் நடக்கிறது. இதில் பெண்கள் ஆக்கி போட்டியில் மொத்தம் 12 அணிகள் விளையாடுகின்றன. இவற்றில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சீனா, அர்ஜென்டினா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 6 அணிகள் இரண்டு தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகிறது.
ஒரு தகுதி சுற்று போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஜனவரி 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது. இதே நாளில் ஸ்பெயினின் வலென்சியாவிலும் மற்றொரு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது.
ராஞ்சியில் நடக்கும்பெண்கள் ஆக்கி தகுதி சுற்றில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக்குடியரசு, 'பி' பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இத்தாலி, அமெரிக்கா ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை உறுதி செய்யும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
தகுதி சுற்றுக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக, உலகின் சிறந்த கோல் கீப்பருக்கான விருதை பெற்றவரான சவிதா தொடருகிறார். துணை கேப்டனாக 300 போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த முன்கள வீராங்கனை வந்தனா கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி வருமாறு:-
கோல் கீப்பர்கள்: சவிதா (கேப்டன்), பிச்சுதேவி கரிபாம்.
நடுகளம்: நிஷா, வைஷ்ணவி, நேகா, நவ்னீத் கவுர், சலிமா டெடி, சோனிகா, ஜோதி, பியூட்டி டங்டங்.
முன்களம்: லால்ரெம்சியாமி, சங்கீதா குமாரி, தீபிகா, வந்தனா கட்டாரியா.
பின்களம்: நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி, மோனிகா.