உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவது யார்? ஆஸ்திரேலியா-பெரு அணிகள் இன்று மோதல்..!
|22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
தோகா,
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது.
மற்ற அணிகள் அனைத்தும் தகுதி சுற்று மூலமே தகுதி பெறும். இதுவரை பிரேசில், பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்ச்சுகல், ஜப்பான், ஈரான் உள்பட 30 அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. உலக கோப்பை போட்டியில் எந்தெந்த அணிகள் எந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன என்ற விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இன்னும் 2 அணிகள் மட்டுமே தகுதி பெற வேண்டியது இருக்கிறது. அவை எது? என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்து விடும்.
இன்று (திங்கட்கிழமை) இரவு நடைபெறும் உலக கோப்பை தகுதி சுற்று 'பிளே-ஆப்' ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-பெரு அணிகள் சந்திக்கின்றன. நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் மற்றொரு 'பிளே-ஆப்' ஆட்டத்தில் கோஸ்டாரிகா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு ஆட்டங்களும் கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதியடையும்.