< Back
கால்பந்து
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி தோல்வி

Image Courtesy: AFP

கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி தோல்வி

தினத்தந்தி
|
12 Jun 2024 12:15 AM IST

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

அல் ரேயான்,

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஆசிய மண்டலத்துக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் மொத்தம் 36 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 9 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி சுற்றின் 3-வது ரவுண்டுக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கிறது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த பிரிவில் இடம் பெற்றிருக்கும் மற்ற அணிகளாகும். 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள கத்தார் 3-வது சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறி விட்டது. மற்றொரு இடத்திற்கு இந்தியா (5 புள்ளி), ஆப்கானிஸ்தான் (5 புள்ளி), குவைத் (4 புள்ளி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் 'ஏ' பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் ஒரு ஆட்டத்தில் தரவரிசையில் 121-வது இடத்தில் உள்ள இந்தியா, 34-ம் நிலை அணியான கத்தாரை அல்ரேயானில் உள்ள ஜாசிம் பின் ஹமாத் ஸ்டேடியத்தில் சந்தித்தது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் கத்தார் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. இதையடுத்து பதில் கோல் திருப்ப இந்திய வீரர்கள் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

இறுதியில் கத்தார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றின் 3-வது ரவுண்டுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

மேலும் செய்திகள்