< Back
கால்பந்து
பெண்கள் உலக கோப்பை கால்பந்து: இந்தியா வெற்றி கணக்கை தொடங்குமா?
கால்பந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: இந்தியா வெற்றி கணக்கை தொடங்குமா?

தினத்தந்தி
|
13 Oct 2022 11:19 PM GMT

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ அணியுடன் இந்தியா இன்று மோத உள்ளது.

புவனேஷ்வர்,

7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவில் புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 0-8 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் சரண் அடைந்தது. ஒருதரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி கோலை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்க முடியாமல் திணறியது. இந்த நிலையில் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, மொராக்கோ அணியுடன் மோதுகிறது.

மொராக்கோ அணி முதல்முறையாக இந்த போட்டிக்கு தகுதி பெற்று இருந்தாலும், ஆப்பிரிக்க தகுதி சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தான் இந்த ஆட்டத்துக்கு தகுதி கண்டது. அந்த அணி தன்னுடைய முதல் லீக் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலிடம் தோற்றது. எனவே மொராக்கோவுக்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் இது இந்திய அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இந்த ஆட்டத்தில் தோற்றால் இந்திய அணியின் கால்இறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விடும். வெற்றி கணக்கை தொடங்க இரு அணிகளும் வரிந்துகட்டுவதால் பரபரப்புக்கு குறைவிருக்காது.

மேலும் செய்திகள்