< Back
கால்பந்து
பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவை வீழ்த்தியது ஸ்பெயின்

Image Courtesy : @FIFAWWC twitter

கால்பந்து

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவை வீழ்த்தியது ஸ்பெயின்

தினத்தந்தி
|
27 July 2023 3:16 AM IST

ஸ்பெயின் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான ஜாம்பியாவை எளிதில் தோற்கடித்தது.

ஆக்லாந்து,

பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறும்.

இந்த கால்பந்து திருவிழாவில் 7-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஆக்லாந்தில் நடந்த 'சி' பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான ஜாம்பியாவை எளிதில் தோற்கடித்தது. உலகக் கோப்பையில் அந்த அணியின் மிகப்பெரிய வெற்றியாக இது அமைந்தது.

ஸ்பெயின் அணி தரப்பில் தெரிசா அபில்லிரியா (9-வது நிமிடம்) ஒரு கோலும், ஜெனிபர் ஹிர்மோசோ (13-வது, 70-வது நிமிடம்), அல்பா ரீடோன்டோ (69-வது, 85-வது நிமிடம்) தலா 2 கோலும் அடித்தனர். இது ஜெனிபர் ஹிர்மோசோ களம் கண்ட 100-வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் அணி தொடர்ச்சியாக ருசித்த 2-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஸ்பெயின் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. 2-வது உதை வாங்கிய ஜாம்பியா நடையை கட்டியது. இந்த பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார் என்பதை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் ஜப்பான்-ஸ்பெயின் அணிகள் வருகிற 31-ந் தேதி மோதுகின்றன.

மேலும் செய்திகள்