பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முதல் வெற்றியை பதிவு செய்தது பிரான்ஸ்
|பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
வெலிங்டன்,
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.
இதில் 10-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த ('எப்' பிரிவு) ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
பிரான்ஸ் அணியில் இவ்ஜெனி லீ சோமெர் 17-வது நிமிடத்திலும், வின்டி ரினார்ட் 83-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். இவ்ஜெனி லீ சோமெர் உலகக் கோப்பை போட்டி தொடரில் அடித்த 6-வது கோல் இதுவாகும். இதன் மூலம் அவர் உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல் அடித்த பிரான்ஸ் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். பிரேசில் தரப்பில் டிபோரா கிறிஸ்டியன் டி ஆலிவிரா 58-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.