பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அணிக்கு முதல் வெற்றி
|போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது.
ஹாமில்டன்,
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.
இதில் 8-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 'பி' பிரிவில் ஹாமில்டனில் நடந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான வியட்நாமை வென்றது. போர்ச்சுகல் அணியில் தெல்மா என்கர்னாகோ 7-வது நிமிடத்திலும், கிகா நசரத் 21-வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.
2-வது ஆட்டத்தில் ஆடிய அறிமுக அணியான போர்ச்சுகல் உலகக் கோப்பை போட்டியில் முதல் வெற்றியை சுவைத்ததுடன், அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது. தொடர்ந்து 2-வது தோல்வி கண்ட வியட்நாம் அணி நாக்-அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது.