< Back
கால்பந்து
பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் மோதல்

Image Courtesy : @FIFAWWC twitter

கால்பந்து

பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் மோதல்

தினத்தந்தி
|
17 Aug 2023 3:51 AM IST

இறுதி ஆட்டத்தில் வரும் 20-ந்தேதி இங்கிலாந்து அணி, ஸ்பெயினை சந்திக்கிறது.

சிட்னி,


9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் சிட்னியில் நேற்றிரவு நடந்த 2-வது அரைஇறுதியில் ஐரோப்பிய சாம்பியனான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுடன் கோதாவில் குதித்தது.

75 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் இரு அணியினரும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடினர். பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் இங்கிலாந்து (58 சதவீதம்) சற்று ஆதிக்கம் செலுத்தினாலும் அவர்களுக்கு ஆஸ்திரேலியா எல்லா வகையிலும் கடும் சவால் அளித்தது.

36-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் எலா தூனே கோல் அடித்தார். 63-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் சாம் கெர் 23 மீட்டர் தூரத்தில் இருந்து பந்தை உதைத்து பிரமாதமாக கோலுக்குள் செலுத்தி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ஆனால் அவர்களின் உற்சாகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. 71-வது நிமிடத்தில் லாரென் ஹெம்பும், 86-வது நிமிடத்தில் அலிசியா ருசோவும் கோல் போட்டு இங்கிலாந்துக்கு வலுவான முன்னிலையை உருவாக்கி வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

முடிவில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவின் கனவை சிதைத்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 6-வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து இதற்கு முன்பு அதிகபட்சமாக 3-வது இடத்தை பிடித்து இருந்தது.


வருகிற 20-ந்தேதி இதே மைதானத்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, ஸ்பெயினை சந்திக்கிறது. இதில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு முதல் உலகக் கோப்பை கிரீடமாக இருக்கும். முன்னதாக 19-ந்தேதி நடக்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், சுவீடனும் மோதுகின்றன.

மேலும் செய்திகள்