பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு தகுதி
|இங்கிலாந்து அணி கொலம்பியாவை வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.
சிட்னி,
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அரங்கேறிய கால்இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, 25-வது இடத்தில் இருக்கும் கொலம்பியாவுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பந்தை அதிக நேரம் (61 சதவீதம்) தங்கள் கட்டுபாட்டில் வைத்து ஆதிக்கம் செலுத்தினாலும், கொலம்பியா அணி 44-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது. அந்த அணி வீராங்கனை லிசி சான்டோஸ் இந்த கோலை அடித்தார். காயம் உள்ளிட்ட நேர வியரத்துக்கான முதல்பாதியில் அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து வீராங்கனை லாரென் ஹெம்ப் கோல் அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் பாதியில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை எட்டியது.
63-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை அலிசியா ருசோ கோல் அடித்து தங்களது அணிக்கு முன்னிலை தேடிக்கொடுத்தார். இந்த முன்னிலையை இங்கிலாந்து அணியினர் கடைசி வரை தக்கவைத்து கொண்டனர். கொலம்பியா அணியினர் மேலும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.
இந்த போட்டி தொடரில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். தொடர்ந்து வரும் 15-ந் தேதி நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் ஸ்பெயின்-சுவீடன் அணியும், 16-ந் தேதி நடைபெரும் 2-வது அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணியும் மோதுகின்றன.