பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது கொலம்பியா
|கடைசி நிமிடத்தில் கோல் அடித்து கொலம்பியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது.
சிட்னி,
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
'எச்' பிரிவில் சிட்னியில் நேற்று அரங்கேறிய ஒரு ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான ஜெர்மனி, கொலம்பியாவை எதிர்கொண்டது. இதில் பந்து பெரும்பாலான நேரம் ஜெர்மனி வசமே (68 சதவீதம்) சுற்றி வந்தது. அதிகமான ஷாட்டுகளையும் இவர்கள் தான் உதைத்தனர். ஆனால் அதிர்ஷ்டக்காற்று கொலம்பியா பக்கம் வீசியது. 52-வது நிமிடத்தில் கொலம்பியாவின் 18 வயதான லின்டா கேல்சிடோ எதிரணியின் முன்கள வீராங்கனைகளை ஏமாற்றி பிரமாதமாக கோல் அடித்தார்.
89-வது நிமிடத்தில் ஜெர்மனி கேப்டன் அலெக்சாண்ட்ரா போப் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். 'டிரா'வில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக ஒதுக்கப்பட்ட 7 நிமிடங்களில், இதன் கடைசி நிமிடத்தில் கார்னரில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட பந்தை கொலம்பியாவின் மானுல்லா வனேகஸ் தலையால் முட்டி கோல் போட்டு ஜெர்மனியை திகைக்க வைத்தார்.
முடிவில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது. ஜெர்மனி அணி குரூப் சுற்றில் தோல்வி அடைவது 1995-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.