வீராங்கனைகளை தாக்கிய விவகாரம்: விசாரணையை முடித்து வைத்த இந்திய கால்பந்து சம்மேளனம்
|தீபக் ஷர்மாவை சஸ்பெண்ட் செய்து அகில இந்திய கால்பந்து சம்மேளன செயற்குழு உத்தரவிட்டிருந்தது.
புதுடெல்லி,
கோவாவில் நடந்த இந்திய பெண்கள் கால்பந்து லீக்கின் 2-வது டிவிசன் போட்டியில் இமாசலபிரதேசத்தை சேர்ந்த காத் எப்.சி. அணிக்காக விளையாடிய 2 வீராங்கனைகளை, அந்த கிளப்பின் உரிமையாளரும், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினருமான தீபக் ஷர்மா கடந்த வாரம் இரவு ஓட்டல் அறையில் அத்துமீறி நுழைந்து தாக்கினார்.
இந்த சம்பவம் குறித்து போட்டியை நடத்திய கோவா கால்பந்து சங்கம் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட தீபக் ஷர்மா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது குறித்து விசாரிக்க 3 பேர் கமிட்டியை அமைத்து இருந்த அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டது.
இதனிடையே தீபக் ஷர்மாவை அகில இந்திய கால்பந்து சம்மேளன செயற்குழு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. அத்துடன் முன்பு அமைக்கப்பட்ட 3 பேர் விசாரணை கமிட்டி கலைக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு இந்த பிரச்சினை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீராங்கனைகளை தாக்கிய விவகாரம் தொடர்பான விசாரணை முடித்து வைக்கப்படுவதாக இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், "இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருதரப்பினரும் பிரச்சினையை தொடர வேண்டாம் என விரும்புவதால், தொடர்ந்து விசாரணையை நடத்த வேண்டிய சூழல் ஏற்படவில்லை. இதனால், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முடித்து வைக்கப்படுகிறது" என இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.