உள்நாட்டு கால்பந்து போட்டியில் அடுத்த ஆண்டு வரை ஆடுவேன் - சுனில் சேத்ரி பேட்டி
|ஐ.எஸ்.எல். போட்டியில் பெங்களூரு அணியில் இன்னும் ஒரு ஆண்டு இருப்பேன் என்று சுனில் சேத்ரி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், முன்கள வீரருமான 39 வயது சுனில் சேத்ரி, அடுத்த மாதம் (ஜூன்) 6-ந் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் குவைத்துக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்த நிலையில் சுனில் நேத்ரி காணொலி மூலம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
எனது உடல் நலம் காரணமாக நான் ஓய்வு முடிவை எடுக்கவில்லை. நான் இன்னும் நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். ஓடுகிறேன், விரட்டுகிறேன். தற்காப்பிலும் நன்றாகவே செயல்படுகிறேன். கடினமாக உழைப்பதில் எனக்கு பிரச்சினை எதுவும் கிடையாது. மனநலன் கருதியே இந்த முடிவை எடுத்தேன்.
ஐ.எஸ்.எல். போட்டியில் பெங்களூரு அணியில் இன்னும் ஒரு ஆண்டு இருப்பேன். உள்நாட்டு போட்டியில் எவ்வளவு காலம் விளையாடுவேன் என்பது எனக்கு தெரியாது. அதன் பிறகு நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். ஓய்வு பெற்ற பிறகு ஒருபோதும் பயிற்சியாளராக செயல்பட மாட்டேன் என்று சொல்லமாட்டேன். அது பற்றி ஓய்வுக்கு பிறகு தான் சிந்திப்பேன்.
தற்போது எனது திட்டத்தில் அது முன்னணியில் இல்லை. நான் தேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டிமாக்கை சந்தித்து ஓய்வு குறித்து தெரிவித்த போது அவர் அதை புரிந்து கொண்டார். எனக்கு மிகவும் நெருக்கமான நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட்கோலியிடமும் பேசினேன். அவரும் எனது முடிவை புரிந்து கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.