உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு நிச்சயம் தகுதி பெறுவோம்- சுனில் சேத்ரி நம்பிக்கை
|ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய அணி முதல் சுற்று ஆட்டங்களில் கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் விளையாட உள்ளது. இதில் முதல் 2 இடங்களுக்குள் வந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
இந்திய அணி நீண்ட காலமாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முயற்சித்து வருகிறது. ஆனால் தகுதிபெற முடியவில்லை. இந்நிலையில் 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு நிச்சயம் தகுதி பெறுவோம் என்று இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ' அந்த நாளில் நாடு மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு இந்தியனாக, அது என் வாழ்க்கையின் சிறந்த நாட்களில் ஒன்றாக இருக்கும். அந்த நாள் விரைவில் நமக்கு வரும் என்று நம்புகிறேன். அது முழு தேசத்திற்கு கொண்டு வரும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று'என கூறியுள்ளார்.
மேலும் தனது கேரியரை குறித்து பேசுகையில்,
'எனக்கு வயது 39 என்பதால், களத்தைப் பொறுத்த வரையில் எனக்கு நீண்ட கால இலக்குகள் இல்லை. அடுத்த மூன்று மாதங்களைப் பற்றி நான் நினைக்கிறேன், அடுத்த மூன்று மாதங்கள், எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்போம். இப்போது நான் உடல் ரீதியாக நன்றாக உணர்கிறேன். எனது நாட்டிற்காகவும் கிளப்பிற்காகவும் என்னால் பங்களிக்க முடிகிறது. அது எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள், எத்தனை ஆண்டுகள் என்று எனக்குத் தெரியாது. என்னால் பங்களிக்க முடியாத நாள், நான் ஓய்வு பெறுவேன்' என்று கூறியுள்ளார்.