< Back
கால்பந்து
தூரந்த் கோப்பை பரிசளிப்பு விழா: சுனில் சேத்ரியை நகர்ந்து நிற்க வலியுறுத்திய கவர்னர்- வைரல் வீடியோ
கால்பந்து

தூரந்த் கோப்பை பரிசளிப்பு விழா: சுனில் சேத்ரியை நகர்ந்து நிற்க வலியுறுத்திய கவர்னர்- வைரல் வீடியோ

தினத்தந்தி
|
19 Sept 2022 4:57 PM IST

பெங்களூரு எப்.சி அணியின் கேப்டன் சுனில் சேத்திரிக்கு கவர்னர் இல.கணேசன் கோப்பையை வழங்கினார்.

கொல்கத்தா,

20 அணிகள் இடையிலான 131-வது தூரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் பெங்களூரு எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக தூரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. பெங்களூரு அணி சார்பாக சிவசக்தி (10வது நிமிடம்), பிரேசில் வீரர் ஆலன் கோஸ்டா (61வது) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

மும்பை அணிக்காக அபுயா (30-வது நிமிடம்) மட்டுமே ஒரு கோல் அடிக்க சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி தூரந்த் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இதை தொடர்ந்து வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மணிப்பூர் கவர்னரும் மேற்கு வங்க கூடுதல் பொறுப்பு கவர்னருமான தமிழ்நாட்டை சேர்ந்த இல.கணேசன் கலந்துகொண்டார். அப்போது பெங்களூரு எப்.சி அணியின் கேப்டன் சுனில் சேத்திரிக்கு கவர்னர் இல.கணேசன் கோப்பையை வழங்கினார்.

அப்போது கவர்னர் இல.கணேசன் புகைப்படத்தில் தான் தெரிய வேண்டும் என்பதற்காக சுனில் சேத்ரியை சற்று நகர்ந்து நிற்க வலியுறுத்தி அவரை லேசாக தள்ளினார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் கேப்டனை இப்படியா நடத்துவது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


மேலும் செய்திகள்