உலகக் கோப்பை கால்பந்து: கத்தார் சென்றடைந்த அர்ஜென்டினா அணி- மெஸ்சிக்கு உற்சாக வரவேற்பு
|மெஸ்சிக்கு மேளதாளங்கள் முழங்க அர்ஜென்டினா அணியின் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.
தோகா,
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலகக் கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா.
அந்த வகையில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.
அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கத்தார் நாட்டு அரசு செய்து உள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக அந்நாட்டு அரசு கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து வருகிறது.
இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் கத்தார் வந்த வண்ணமாய் உள்ளன. அந்த வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி இன்று கத்தார் சென்று அடைந்துள்ளது.
அர்ஜென்டினா வீரர்களுக்கு கத்தாரில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் நேற்று காட்சி போட்டியில் விளையாடியது. அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்த பிறகு அபுதாபியில் இருந்து இன்று அதிகாலை அர்ஜென்டினா அணி கத்தார் வந்து சேர்ந்தது. அப்போது மெஸ்ஸிக்கு மேளதாளங்கள் முழங்க இந்திய ரசிகர்கள் உட்பட அர்ஜென்டினா அணியின் பலநாட்டு ரசிகர்களும் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.
அர்ஜென்டினா அணிக்கு வரவேற்பு அளிப்பதற்காக கத்தார் சாலைகளில் அர்ஜென்டினா நாட்டின் தேசிய கொடியுடன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மேளதாளங்களுடன் வலம் வந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.