< Back
கால்பந்து
இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வீடியோ உதவி நடுவர் முறை அறிமுகம்
கால்பந்து

இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வீடியோ உதவி நடுவர் முறை அறிமுகம்

தினத்தந்தி
|
31 Aug 2022 1:30 AM IST

வீடியோ உதவி நடுவர் முறை சீனியர் மற்றும் பல்வேறு வயது பிரிவினருக்கான சர்வதேச போட்டிகளில் ஏற்கனவே அமலில் உள்ளது.

புதுடெல்லி,

16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் (17 வயதுக்குட்பட்டோர்) உலக கோப்பை கால்பந்து போட்டி புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் வருகிற அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் வீடியோ உதவி நடுவர் (வி.ஏ.ஆர்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) பெண்கள் நடுவர்கள் கமிட்டி தலைவர் காரி செய்ட்ஸ் அறிவித்துள்ளார்.

போட்டியின் போது நடுவர்கள் அளிக்கும் முடிவில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், ஆட்டத்தின் வீடியோ பதிவினை கண்காணிக்க நியமிக்கப்பட்டு இருக்கும் வீடியோ உதவி நடுவர்கள் என்ன நடந்தது என்பதை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்து உடனடியாக மைதான நடுவருக்கு தகவல் தெரிவிப்பார்கள். அது நடுவர்கள் தவறுக்கு இடமின்றி துல்லியமான முடிவு எடுக்க உதவிகரமாக இருக்கும்.

இந்த வீடியோ உதவி நடுவர் முறை சீனியர் மற்றும் பல்வேறு வயது பிரிவினருக்கான சர்வதேச போட்டிகளில் ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கான போட்டியில் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் இந்த போட்டியில் பணியாற்றும் நடுவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 14 பெண் நடுவர்கள், 28 பெண் உதவி நடுவர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இந்த பட்டியலில் இந்தியர்கள் யாரும் இடம்பெறவில்லை.

மேலும் செய்திகள்