16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இன்று தொடக்கம்
|16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இன்று தொடங்குகிறது.
புவனேஷ்வர்,
ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. முதலில் இந்த போட்டி கடந்த 2020-ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக அப்போது ரத்து செய்யப்பட்ட இந்த போட்டியை மீண்டும் இந்தியாவிலேயே நடத்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் வாய்ப்பு வழங்கியது.
இன்று ஆரம்பிக்கும் இந்த கால்பந்து விழாவில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், அறிமுக அணியான மொராக்கோவும், 'பி' பிரிவில் ஜெர்மனி, நைஜீரியா, சிலி, நியூசிலாந்தும், 'சி' பிரிவில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், கொலம்பியா, மெக்சிகோ, சீனாவும், 'டி' பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஜப்பான், பிரான்ஸ், அறிமுக அணியான தான்சானியா, கனடாவும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
'ஏ' பிரிவு லீக் ஆட்டங்கள் ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்திலும், 'பி' மற்றும் 'டி' பிரிவு லீக் ஆட்டங்கள் கோவாவில் உள்ள நேரு ஸ்டேடியத்திலும், 'சி' பிரிவு ஆட்டங்கள் நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்திலும் நடக்கிறது. கால்இறுதி ஆட்டங்கள் நவிமும்பை, கோவாவிலும், அரைஇறுதி ஆட்டங்கள் கோவாவிலும், இறுதிப்போட்டி நவிமும்பையிலும் அரங்கேறுகிறது.
தொடக்க நாளான இன்று 4 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. புவனேஷ்வரில் நடைபெறும் 'ஏ' பிரிவினருக்கான ஆட்டங்களில் பிரேசில்-மொராக்கோ (மாலை 4.30 மணி), இந்தியா-அமெரிக்கா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. கோவாவில் நடைபெறும் 'பி' பிரிவினருக்கான ஆட்டங்களில் சிலி-நியூசிலாந்து (மாலை 4.30 மணி), ஜெர்மனி-நைஜீரியா (இரவு 8 மணி) அணிகள் சந்திக்கின்றன.
இந்திய பெண்கள் அணி ஜூனியர் உலக கோப்பை தொடரில் கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும். அதாவது இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில், போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அமெரிக்க அணி 5-வது முறையாக இந்த போட்டியில் கலந்து கொள்கிறது. அந்த அணி அதிகபட்சமாக 2008-ம் ஆண்டு 2-வது இடத்தை பிடித்தது. வலுவான அமெரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி கோல் அடித்தாலே பெரிய விஷயம் தான்.
இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் டென்னெர்பி அளித்த பேட்டியில், 'சமீப காலங்களில் நாங்கள் தடுப்பு ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். எனவே எங்களுக்கு எதிராக கோல் அடிப்பது கடினமாகும். நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் சமயத்தில், எதிரணி சற்று தடுமாறினால் எங்களால் முதலில் கோல் அடித்து எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பதுடன் வெற்றி பெறவும் முடியும். எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்கா வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கால்பந்தை பொறுத்தமட்டில் களத்தில் எதுவும் நடக்கலாம். அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களுக்கு புள்ளி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம்' என்றார்.
இந்திய அணியின் கேப்டன் ஆஸ்டம் ஓரியன் கூறுகையில், 'கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த போட்டிக்காக தீவிரமாக தயாராகி இருக்கிறோம். வீராங்கனைகள் போட்டிக்கு தயார் நிலையில் உள்ளனர். இதில் கால்இறுதிக்கு தகுதி அடைந்தாலே பெரிய சாதனையாகும். ஆனால் தற்போது எங்கள் கவனம் எல்லாம் முதல் ஆட்டத்தின் மீது தான் உள்ளது' என்றார்.
போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வருமாறு:-
கோல்கீப்பர்கள்: மோனலிஷா தேவி மொய்ராங்தெம், மெலோடி சானு கெய்ஷம், அஞ்சலி முண்டா, பின்களம்: ஆஸ்டம் ஓரியன், காஜல், நகிதா, பூர்ணிமா குமாரி, வர்ஷிகா, ஷில்கி தேவி ஹிமான், நடுகளம்: பபினா தேவி லிஷம், நிது லிண்டா, ஷைலஜா, சுபாங்கி சிங், முன்களம்: அனிதா குமாரி, லிண்டா கோம் செர்டோ, நேஹா, ரிஜியாதேவி லைஷ்ரம், ஷீலாதேவி லோக்டாங்பாம், கஜோல் ஹபெர்ட் டிசோசா, லாவண்யா உபாத்யாய், சுதா அங்கிதா திர்கே.
இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.