< Back
கால்பந்து
இந்திய கால்பந்து சம்மேளனம் தொடர்பான வழக்கு: 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி கலைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
கால்பந்து

இந்திய கால்பந்து சம்மேளனம் தொடர்பான வழக்கு: 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி கலைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

தினத்தந்தி
|
22 Aug 2022 1:06 PM IST

கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிப்பதற்கு அமைக்கப்பட்ட கமிட்டி நீக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தலை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்காததால் அதன் தலைவராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேலை பதவியில் இருந்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது.

அத்துடன் இந்திய கால்பந்து சம்மேளனத்தை நிர்வகிக்க முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. மேலும் தேசிய விளையாட்டு கொள்கையின்படி இந்திய கால்பந்து சம்மேளன விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்து புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்திய கால்பந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை வருகிற 28-ந் தேதி நடத்த நிர்வாக கமிட்டி ஏற்பாடு செய்து வந்தது. மாநில சங்க நிர்வாகிகளுடன், தலைசிறந்த முன்னாள் வீரர்கள் 36 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னாள் வீரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கியதால் சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) கடும் அதிருப்திக்குள்ளானது.இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகத்தில் 3-ம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு இருப்பதாகவும், மூன்றாம் தரப்பினர் செல்வாக்கு செலுத்துவது பிபா விதிமுறைகளை மீறிய தீவிர செயலாகும். இதனால் இந்திய கால்பந்து சம்மேளனம் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறது என்று 'பிபா' அதிரடியாக அறிவித்தது.

இந்த தடை காரணமாக, இந்தியாவில் அக்டோபர் 11-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து (17 வயதுக்கு உட்பட்டோர்) போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்திய அணி சர்வதேச போட்டி மற்றும் 'பிபா' வின் பயிற்சி உள்ளிட்ட எந்த நிகழ்விலும் பங்கேற்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

இந்த வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அதில் பல தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தை (ஏ ஐ எப் எப்) நிர்வகிப்பதற்கு அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட நிர்வாக கமிட்டி (சிஓஏ குழு) நிறுத்தப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சர்வதேச கால்பந்து அமைப்பு பிபாவால் அனைத்திந்திய கால்பந்து சம்மேளனம் (ஏ ஐ எப் எப்) சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அந்த சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப்பெற வசதியாகவும், 17 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்தவும், சர்வதேச நிகழ்வுகளில் இந்தியாவை சேர்ந்த அணிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் ஆகிய காரணங்களுக்காக இந்த ஆணையை பிறப்பிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

இந்த தீர்ப்பின் மூலம், இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அன்றாட நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு மீண்டும் சம்மேளனத்தின் நிர்வாகத்திடமே ஒப்படைக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்