இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டிமாக் நீக்கம்
|இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக குரோஷியாவை சேர்ந்த இகோர் ஸ்டிமாக் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார்.
புதுடெல்லி,
இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக குரோஷியாவை சேர்ந்த 56 வயதான இகோர் ஸ்டிமாக் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரது ஒப்பந்தம் 2026-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையே, 2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்று 2-வது ரவுண்டில் கடந்த வாரம் நடந்த கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி கண்டு உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இகோர் ஸ்டிமாக்கை நீக்கி இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, உலகக் கோப்பை தகுதி சுற்றில் இந்திய அணி வெளியேறி ஏமாற்றம் அளித்தது.
இந்திய அணியை முன்னெடுத்து செல்ல புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும் என்பதை உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். இதனால் பதவி நீக்க நோட்டீசு ஸ்டிமாக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.