பெண்கள் தெற்காசிய கால்பந்து: பூடானை பந்தாடியது இந்தியா
|20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து போட்டியில் இந்தியா 12-0 என்ற கோல் கணக்கில் பூடானை பந்தாடியது.
டாக்கா,
இந்தியா, வங்காளதேசம், பூடான், நேபாளம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்றுள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பலம் வாய்ந்த இந்தியா 12-0 என்ற கோல் கணக்கில் பூடானை பந்தாடியது.
மாற்று ஆட்டக்காரர் நேஹா (45, 55 மற்றும் 90-வது நிமிடம்), அனிதா குமாரி (50, 69 மற்றும் 78-வது நிமிடம்), லின்டா கோம் (61, 63 மற்றும் 75-வது நிமிடம்) ஆகிய இந்திய வீராங்கனைகள் 'ஹாட்ரிக்' கோல் அடித்தனர். அபுர்னா நர்சாரி (29, 36-வது நிமிடம்), நிது லின்டா (4-வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு அசத்தினர்.
'இந்திய வீராங்கனைகளின் ஒட்டுமொத்த செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் நன்றாக ஆடினர். இப்போது அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வேண்டிய நேரம் இது' என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மேமோல் ராக்கி தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி வங்காளதேசத்துடன் நாளை மோதுகிறது.