< Back
கால்பந்து
தெற்காசிய கால்பந்து போட்டி:இந்தியா-நேபாளம் இன்று மோதல்

image courtesy;twitter @IndianFootball

கால்பந்து

தெற்காசிய கால்பந்து போட்டி:இந்தியா-நேபாளம் இன்று மோதல்

தினத்தந்தி
|
24 Jun 2023 10:32 AM IST

சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை விழ்த்தியது.

பெங்களூரு,

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவரா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் லெபனான், மாலத்தீவு, பூடான், வங்காளதேசம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொள்கிறது. சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடிய உற்சாகத்துடன் களம் காணுகிறது. முதல் ஆட்டத்தில் குவைத்திடம் சரண் அடைந்த நேபாள அணி இந்தியாவின் சவாலை சமாளிப்பது சிரமம் தான். இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் இந்தியாவும், 2-ல் நேபாளமும் வெற்றி பெற்று இருக்கின்றன. 5 ஆட்டங்கள் 'டிரா' ஆனது.

மாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான்-குவைத் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் இந்தியாவிடம் தோற்றது. குவைத் தனது தொடக்க ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்தது. குவைத் அணி வீறுநடையை தொடரவும், பாகிஸ்தான் அணி வெற்றி கணக்கை தொடங்கவும் வரிந்துகட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

மேலும் செய்திகள்