உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண பணம் கொடுத்து 'போலி ரசிகர்களை' மைதானத்தில் குவிக்கிறதா கத்தார்...?
|உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
தோஹா,
உலகக்கோப்பை கால்பந்து போட்டி உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான விளையாட்டில் முதல் இடத்தில் உள்ளது. கால்பந்து விளையாட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் உள்ளது.
இதனிடையே, 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெறுகிறது. 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடக்க விழா கத்தாரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. முதல் போட்டியில் கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தில் ஈக்வடார் அபார வெற்றிபெற்றது.
அதேவேளை, கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதில் துவக்கம் முதலே பெரும் சர்ச்சைகள் நிலவி வருகிறது.
கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானம் மற்றும் மைதானத்திற்கு வெளியே மதுபானம் குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மது குடித்துவிட்டு மைதானத்திற்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர், ரசிகைகள் கண்ணியமான உடையை அணிந்து போட்டியை கண்டுகளிக்க வேண்டும். தூண்டும் வகையில் உடலின் அங்கங்கள் தெரியும்படி ஆடைகளை அணியக்கூடாது, உடலில் போடப்பட்டுள்ள டாட்டூக்கள் தெரியும்படியும் ஆடைகள் அணியக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இசை உபகரணங்கள் உள்பட பல்வேறு கொண்டாட்ட பொருட்களை மைதானத்திற்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறும் ரசிகர், ரசிகைகளை கைது செய்து தண்டனை வழங்கவும் சிறப்பு கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் கத்தாரின் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பல்வேறு புகார்களையடுத்து வெளிநாட்டு கால்பந்து ரசிகர், ரசிகைகள் உலகக்கோப்பை போட்டிகளை கண்டுகளிக்க கத்தாருக்கு வருவதில் விருப்பம் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, கத்தாரில் நேற்று நடந்த உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நாடுகளின் கால்பந்து அணியின் உடையை அணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவது தொடர்பான வீடியோக்கள் வைரலானது.
ஆனால், அவை போலியாக இருக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ரசிகர், ரசிகைகளின் வருகை பெருமளவு குறைவாக உள்ளதால் பணம் கொடுத்து 'போலி ரசிகர்களை' கத்தார் களமிறக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
பல்வேறு நாடுகளின் கால்பந்து அணிந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்த நிலையில் அதில் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு குறைவாகும். போட்டிகளை கண்டுகளிக்கவந்தவர்களின் பெண் ரசிகைகள் மிகவும் குறைவாகும்.
கத்தாரில் பெண் சுதந்திரம் ஒடுக்கப்படுவதாக குற்றச்சாடுகள் உள்ள நிலையில் கால்பந்து உலகக்கோப்பை தொடரை காண பெண்கள் வராதது அந்த கூற்றை உண்மைபடுத்தும் வகையிலேயே உள்ளது.
மேலும், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த லட்சக்கண புலம்பெயர்ந்தோர் கத்தாரில் கட்டுமான பணிகள் உள்பட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு, புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ள ஆயிரக்கணக்கானோரை பணம் கொடுத்து வெளிநாட்டு கால்பந்து ரசிகர்கள் போல சித்தரித்து உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண வெளிநாட்டு ரசிகர்கள் குவிந்துள்ளனர் என்பது போன்ற பிம்பத்தை உருவாக கத்தார் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண மைதானத்திற்கு வரும் பெண் ரசிகைகளின் எண்ணிக்கை குறைவு, ரசிகர்களின் கொண்டாட்டம் செயற்கை தன்மையுடன் உள்ளது உலகக்கோப்பை கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெறுவதாக காண்பிக்க கத்தார் முய்ற்சிப்பதாக பரவும் கூற்றை வெளிப்படுத்தும் வகையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.