நேஷன்ஸ் லீக் கால்பந்து; ஸ்காட்லாந்தை வீழ்த்திய போர்ச்சுகல்
|ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது.
லிஸ்பன்,
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில், நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் லிஸ்பனில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஸ்காட்லாந்தின் ஸ்காட் மெக்டோமினே (7வது நிமிடம்) கோல் அடித்து அணிக்கு 1 - 0 என முன்னிலை பெற்று தந்தார். இதையடுத்து பதில் கோல் திருப்ப போர்ச்சுகல் வீரர்கள் தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் போர்ச்சுகல் வீரர்களால் கோல் அடிக்க இயலவில்லை.
இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என ஸ்காட்லாந்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் போர்ச்சுகலின் புருனோ பெர்னாண்டஸ் (54வது நிமிடம்) கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 சமனுக்கு வந்தது. இதையடுத்து இந்த ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் போர்ச்சுகல் 2-1 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தை 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வென்றது.