எனது அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் - பி.எஸ்.ஜி கிளப்பில் இருந்து விலகிய எம்பாப்பே கொடுத்த அப்டேட்
|எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகி இருந்தது.
பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே .கிளப் போட்டிகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக பி.எஸ்.ஜி கிளப் அணிக்காக விளையாடி வரும் எம்பாப்வே ரியல் மாட்ரிட் கிளப் அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தொடர்ந்து யூகச் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் பி.எஸ்.ஜி.அணிக்காகவே விளையாடி வந்தார்.
இந்த நிலையில் ஜூன் மாதத்துடன் முடிவடையும் லீக்-1 சீசனோடு பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேற இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் எம்பாப்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது,
பிரான்ஸ் நாட்டில் சிறந்த கிளப் அணியின் வீரராக பல ஆண்டுகள் நான் இருந்தது எனக்கு பெருமை. உலகின் மிகச் சிறந்த கிளப் அணிகளில் ஒன்று பி.எஸ்.ஜி . எனக்கு புதிய சவால் தேவை என கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்திருந்தார். எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், பிரான்சில் லீக் 1 விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆண்டின் சிறந்த வீரர் விருதை எம்பாப்பே வென்றார். இதையடுத்து அவர் பேசுகையில் கூறியதாவது, எனது அடுத்த கிளப் பற்றி அறிவிக்க இது சரியான நேரம் அல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு சரியான நேரம் இருக்கிறது. எனது அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.