கால்பந்து வரலாற்றில் உலக சாதனை படைத்த மெஸ்ஸி
|மெஸ்ஸி கிளப் போட்டிகளில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
வாஷிங்டன் ,
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி கிளப் போட்டிகளில் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். அதன்படி மேஜர் லீக் கால்பந்து தொடரில் ( எம்.எல்.எஸ்.)இன்று நடைபெற்ற போட்டியில் இன்டர் மியாமி அணியும் , கொலம்பஸ் அணியும் விளையாடின. இதில் இன்டெர் மியாமி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.இந்த வெற்றியின் மூலம் இன்டர் மியாமி அணி முதல்முறையாக எம்.எல்.எஸ். சப்போர்டர்ஸ் ஷீல்டு கோப்பையை வென்றுள்ளது.
இந்த சீசனில் சிறப்பாக விளையாடும் ஒரு அணிக்கு புள்ளிகளின் அடிப்படையில் சப்போர்டர்ஸ் ஷீல்டு விருது கொடுப்பது வழக்கம். 68 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் இன்டர் மியாமி அணிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இது மெஸ்ஸி வென்ற 46-வது கோப்பையாகும். மெஸ்ஸி கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்