தனது 1,000-வது போட்டியில் கோல் அடித்து புதிய சாதனை படைத்த மெஸ்ஸி
|1,000 வது போட்டியில் ஆடிய மெஸ்ஸி நேற்றைய போட்டியையும் சேர்த்து மொத்தம் 789 கோல்களை அடித்திருக்கிறார்.
தோகா,
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஒரு கோல் அடித்தார். 77-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் என்சோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இறுதியில், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த நாக்-அவுட் போட்டி மெஸ்ஸியின் ( கிளப் ,சர்வதேச போட்டி) 1,000வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு கோல் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி அடித்த கோல்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. மேலும் அர்ஜென்டினா ஜாம்பவான் டியகோ மரடோனா உலகக்கோப்பை தொடரில் 8 கோல் அடித்திருந்த சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார் .
இதுவரை 5 உலகக் கோப்பையில் விளையாடியுள்ள மெஸ்ஸி, நாக் அவுட் சுற்றில் அடித்த முதல் கோல் இதுவாகும்.
1,000-வது போட்டியில் ஆடிய மெஸ்ஸி நேற்றைய போட்டியையும் சேர்த்து மொத்தம் 789 கோல்களை அடித்திருக்கிறார்.
'இதுதான் 1000 வது போட்டி என்பதே போட்டிக்கு பின்னர் எனக்கு தெரியும். இந்தத் தருணத்தில் அனுபவித்து வாழ முற்படுகிறேன் அவ்வளவே. அர்ஜெண்டினா அடுத்தச்சுற்றுக்கு சென்றதுதான் பெரும் மகிழ்ச்சி' என நேற்றைய போட்டிக்குப் பிறகு மெஸ்ஸி பேசியிருந்தார்.நேற்று தன் 1000 வது போட்டியில் விளையாடிய மெஸ்ஸி சிறந்த ஆட்ட நாயகனுக்கான விருதை வென்றார்.