உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஓர் விருதை 8வது முறையாக வென்ற மெஸ்சி..!!
|2023 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் பலோன் டி'ஓர் விருதை லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
பாரிஸ்,
கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு வருடந்தோறும் பிபா வழங்கி வருகிறது. 1956ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 (30 ஆண் மற்றும் 30 பெண்) பேர் இடம் பெற்றிருந்தனர்..
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி 8-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார் லியோனல் மெஸ்சி. அவர் ஏழு கோல்களை அடித்துடன் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.
முன்னதாக இந்த விருதுக்கு அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்திருந்தார். மேலும் அதிகமுறை இந்த விருதை வென்றவரும் இவரே. மெஸ்சி இதுவரை 7 முறை இந்த விருதை வென்றிருந்தார். இந்த விருத்துக்கான போட்டி பட்டியலில் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலண்ட் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
மெஸ்ஸி 2009 இல் தனது முதல் பலோன் டி'ஓர் விருதை வென்றார், அதைத் தொடர்ந்து 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் வென்று அசத்தியிருந்தார்.
அதே நேரத்தில் உலகக் கோப்பை வென்ற ஸ்பெயின் நட்சத்திர வீராங்கனை அடானா பொன்மதி, பெண்களுக்கான பலோன் டி'ஓர் விருதை கைப்பற்றினார்.