புதிய கால்பந்து அணிக்கு மாறும் லயோனல் மெஸ்சி மற்றும் பென்ஜிமா.
|லயோனல் மெஸ்சி பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் பி.எஸ்.ஜி. அணியில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு விலகினார்.
பாரீஸ்,
பிரான்ஸ் கால்பந்து வீரர் கரீம் பென்ஜிமா, ஸ்பெயினைச் சேர்ந்த ரியல்மாட்ரிட்அணிக்காக கடந்த 14 ஆண்டுகளாக விளையாடி வந்தார். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். அந்த அணிக்காக 353 கோல்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் இந்த சீசனுடன் ரியல்மாட்ரிட் அணியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார்.
இதற்கிடையே 35 வயதான கரீம் பென்ஜிமாவை தங்கள் அணிக்கு இழுக்க சவுதிஅரேபியாவைச் சேர்ந்த அல்-இத்திகாத் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் அந்த அணிக்கு விளையாட அவர் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார். ஏற்கனவே போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ சவுதிஅரேபியாவின் அல் நசீர் அணிக்காக ஆடுகிறார். அந்த வரிசையில் பென்ஜிமாவும் இணைகிறார்.
இதே போல் அர்ஜென்டினா அணியின் கேப்டனும், உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 7 முறை வாங்கியவருமான லயோனல் மெஸ்சி, பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அணியிலிருந்து இரு தினங்களுக்கு முன்பு விலகினார். அவரை தனது அணிக்கு விளையாட வைக்க சவுதி அரேபியாவின் அல்-ஹலால் அணி முயற்சிக்கிறது. ஆண்டுக்கு ரூ.3,500 கோடிக்கு மேல் ஊதியம் கொடுக்கவும் முன்வந்துள்ளது. மெஸ்சி, சவுதி அரேபியாவின் சுற்றுலா தூதராக இருப்பது கவனிக்கத்தக்கது.
ஆனால் மெஸ்சியை பொறுத்தவரை மீண்டும் பார்சிலோனா அணிக்காக (ஸ்பெயின்) விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்திய அவரது தந்தை ஜாாஜ், மெஸ்சி பார்சிலோனா அணிக்கு திரும்புவார் என்று நம்புவதாக கூறியுள்ளார். 35 வயதான மெஸ்சி ஏற்கனவே ஜூனியர் மட்டத்தில் இருந்து பார்சிலோனா அணிக்காக 20 ஆண்டுகள் விளையாடியது நினைவு கூரத்தக்கது. இன்னும் சில தினங்களில் அவரது புதிய அணி எதுவென்று தெரியவரும்.