கிங் கோப்பை கால்பந்து: ஈராக் அணியிடம் இந்தியா தோல்வி
|49-வது கிங் கோப்பை கால்பந்து போட்டி தாய்லாந்தின் சியாங் மேய் நகரில் நேற்று தொடங்கியது.
சியாங் மேய்,
49-வது கிங் கோப்பை கால்பந்து போட்டி தாய்லாந்தின் சியாங் மேய் நகரில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, தாய்லாந்து, ஈராக், லெபனான் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. நேரடியாக அரைஇறுதியில் ஆடிய இந்தியா, ஈராக்கை எதிர்கொண்டது. நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி இல்லாத நிலையிலும் கடும் சவால் அளித்த இந்தியா 16-வது நிமிடத்தில் முதல் கோலை போட்டது. மகேஷ் நாரெம் இந்த கோலை அடித்தார். 28-வது நிமிடத்தில் ஈராக்கின் கரிம் அலி, பெனால்டி வாய்ப்பை கோலாக்கி சமனுக்கு கொண்டு வந்தார். 51-வது நிமிடத்தில் சுயகோல் மூலம் இந்தியா மறுபடியும் முன்னிலை பெற்றது. ஆனால் 80-வது நிமிடத்தில் மீண்டும் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஈராக் வீரர் அய்மேன் ஹூசைன் கோல் போட்டார். வழக்கமான ஆட்டநேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இந்த போட்டி விதிமுறைப்படி கூடுதல் நேரம் கிடையாது.
இதையடுத்து வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஈராக் தனது 5 வாய்ப்பையும் கோலாக்கியது. இந்தியா 5 வாய்ப்பில் 4-ஐ மட்டுமே கோலாக்கியது. பிரன்டன் பெர்னாண்டஸ் பந்தை கம்பத்தில் அடித்து வீணடித்தார். முடிவில் ஈராக் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்த ஆண்டில் 11 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத இந்தியாவின் வீறுநடை முடிவுக்கு வந்தது.
மற்றொரு அரைஇறுதியில் தாய்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் லெபனானை தோற்கடித்தது. இறுதி ஆட்டத்தில் தாய்லாந்து அணி, ஈராக்குடன் நாளைமறுதினம் மோதுகிறது. அதே நாளில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா-லெபனான் அணிகள் சந்திக்கின்றன.