கிங் கோப்பை கால்பந்து: 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா தோல்வி
|கிங் கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
சியாங் மேய்,
49-வது கிங் கோப்பை கால்பந்து போட்டி தாய்லாந்தின் சியாங் மேய் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் (வெண்கலப்பதக்கத்துக்கு) இந்தியாவும், லெபனானும் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 77-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை இந்திய கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து தடுத்தார். அவரது கையில் பட்டு வெளியே வந்த பந்தை லெபனான் வீரர் காசீம் அல் ஸின் அந்தரத்தில் பல்டி அடித்தபடி உதைத்து வலைக்குள் தள்ளி சிலிர்க்க வைத்தார். பதில் கோல் திருப்ப கடைசி கட்டத்தில் இந்திய வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
ஆனாலும் அவர்களின் தடுப்பு அரணை உடைக்க இயலவில்லை. முடிவில் லெபனான் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியது. 2019-ம் ஆண்டு போட்டியில் வெண்கலம் வென்ற இந்தியா இந்த முறை ஒரு வெற்றி கூட பெறாமல் ஏமாற்றத்துடன் தாயகம் திரும்புகிறது.