ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அரையிறுதி போட்டியில் நைஜீரியா- கொலம்பியா அணிகள் நாளை பலப்பரீட்சை
|நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் ஜெர்மனி- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
பனாஜி,
ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. புவனேஷ்வர், கோவா, நவிமும்பை ஆகிய நகரங்களில் நடந்து வரும் இந்த தொடர் அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
16 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் ஜெர்மனி, ஸ்பெயின், நைஜீரியா, கொலம்பியா அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் கோவாவில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் நைஜீரியா- கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
இதை தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் ஜெர்மனி- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.