ஜூனியர் பெண்கள் கால்பந்து உலக கோப்பை: இந்திய அணியின் கேப்டன் வீட்டிற்கு டி.வி வழங்கிய ஜார்க்கண்ட் அரசு
|தங்கள் மகள் விளையாடுவதை ஓரான் குடும்பத்தினர் தங்கள் வீட்டின் டி.வி-யில் முதல் முறையாக பார்க்கவிருக்கின்றனர்.
கும்லா,
16 அணிகள் கலந்து கொண்டுள்ள பிபா யு 17 (17 வயதுக்கு உட்பட்டோர்) மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இன்று தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் கோவா, நவி மும்பை ஆகிய பகுதிகளிலும் நடைபெறுகிறது.
தொடக்க நாளான இன்று 4 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. இதில் புவனேஷ்வரில் நடைபெறும் 'ஏ' பிரிவினருக்கான ஒரு போட்டியில் இந்தியா-அமெரிக்கா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இந்திய அணிக்கு அஸ்டம் ஓரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஓரான், ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் வீட்டில் டி.வி கிடையாது. இதனால் அவரது பெற்றோருக்கு தங்கள் மகள் விளையாடுவதை பார்ப்பது என்பது இயலாது.
இந்த நிலையில், ஓரான் விளையாடுவதை அவர்களின் குடும்பத்தினர் பார்க்க வசதியாக ஜார்கண்ட் அரசு போட்டித் தொடங்குவதற்கு முன்பாக, ஓரானின் வீட்டில் ஒரு டி.வி பெட்டியும், அதற்கு மின்சாரத்திற்காக இன்வெட்டர் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வசதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தங்கள் மகள் விளையாடுவதை ஓரான் குடும்பத்தினர் தங்கள் வீட்டின் டி.வி-யில் முதல் முறையாக பார்க்கவிருக்கின்றனர்.
அஸ்டம் ஓரானால் அவரது கிராமத்திற்கு நல்ல சாலை வசதியும் கிடைத்துள்ளது. அந்த சாலை போடும் பணியில் அவரது பெற்றோரும் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள்.