ஐஎஸ்எல் தொடரின் சாம்பியன்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன் - ஹாரிசன்
|ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹாரிசன் ஹிக்கி சாயரை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜாம்ஷெட்பூர்,
இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி கடந்த சில தினங்களுக்கு முன் மிட்பீல்டர் ஜிதேந்திர சிங்கை தக்க வைத்தது. அதை தொடர்ந்து அந்த இந்திய வீரர் ஜெர்மன்பிரீத் சிங், பிரதிக் சௌதரி மற்றும் பிரேசில் அணியின் மிட்ஃபீல்டர் வெலிங்டன் பிரியோரியை ஒப்பந்தம் செய்தது.
இந்த நிலையில் தற்போது அந்த அணி ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹாரிசன் ஹிக்கி சாயரை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் ஒரு வருடம் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது குறித்து ஹாரிசன் கூறும் போது, " இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தில் நான் முதல் முறையாக விளையாட இருக்கிறேன். மேலும் தற்போதைய ஐஎஸ்எல் லீக் சாம்பியன்களுடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியன் சூப்பர் லீக் அதிவேகமாக வளர்ந்துள்ளது, டிம் காஹில் போன்ற வீரர்கள் முன்பு ஜாம்ஷெட்பூர் அணிக்காக விளையாடியுள்ளனர். ஜாம்ஷெட்பூரின் ரசிகர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நான் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன்" என தெரிவித்தார்.