ஐ.எஸ்.எல் கால்பந்து : தமிழக வீரர் அஜித் குமாரை ஒப்பந்தம் செய்தது சென்னையின் எப்.சி அணி
|சென்னையை சேர்ந்த அஜித் குமாரை சென்னையின் எப்.சி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை,
இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் சென்னையின் எப்.சி அணி, அணியை வலுவாக கட்டமைக்க புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் சென்னை அணி கானா கால்பந்து வீரர் குவமே கரிகாரியை ஒப்பந்தம் செய்தது. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தாய்லாந்து லீக்கில் 29 லீக் ஆட்டங்களில் 13 கோல்கள் அடித்து அசத்தியவர். அதன் பிறகு சென்னை அணி மேலும் ஒரு வெளிநாட்டு வீரரான குரோஷிய வீரர் பீட்டர் ஸ்லிஸ்கோவிக்கை ஒப்பந்தம் செய்தது.
இந்த நிலையில் தற்போது அந்த அணி சென்னையை சேர்ந்த அஜித் குமாரை ஒப்பந்தம் செய்துள்ளது. 25 வயதான அவர், பெங்களூரு எஃப்சிக்காக கடந்த இரண்டு ஐஎஸ்எல் சீசன்களில் 13 போட்டிகளில் பங்கேற்றார். அவர் நான்கு ஏஎப்சி கோப்பை மற்றும் ஐந்து டுராண்ட் கோப்பை போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர் தனது சொந்த மாநில அணிக்கு திரும்பி உள்ளார்.
இது குறித்து அஜித் குமார் கூறுகையில், "சென்னைக்கு திரும்பி வருவது நன்றாக இருக்கிறது. இந்த முறை சென்னையின் எஃப்சி வீரராக. சொந்த ரசிகர்கள் முன் விளையாட ஆவலாக காத்திருக்கிறேன்" என தெரிவித்தார்.