< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி 21-ந் தேதி தொடக்கம்: ஆசிய விளையாட்டு நடப்பதால் இந்திய வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி 21-ந் தேதி தொடக்கம்: ஆசிய விளையாட்டு நடப்பதால் இந்திய வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

தினத்தந்தி
|
8 Sept 2023 2:26 AM IST

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கொச்சியில் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. அந்த சமயத்தில் ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியும் நடைபெறுவதால் இந்திய வீரர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கொச்சியில் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. அந்த சமயத்தில் ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியும் நடைபெறுவதால் இந்திய வீரர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐ.எஸ்.எல். கால்பந்து

நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு, சென்னையின் எப்.சி., ஈஸ்ட் பெங்கால், எப்.சி. கோவா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஒடிசா, புதிதாக அடியெடுத்து வைக்கும் ஐ லீக் சாம்பியன் பஞ்சாப் எப்.சி. ஆகிய 12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி வருகிற 21-ந் தேதி கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் தொடங்கும் என்று போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்தனர்.

தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-பெங்களூரு எப்.சி. மோதுகின்றன. டிசம்பர் 29-ந் தேதி வரையிலான முதல் பாதி போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தினசரி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும். இரண்டு போட்டிகள் இருக்கும் நாளில் முதலாவது ஆட்டம் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும். சர்வதேச கால்பந்து போட்டிகளை கருத்தில் கொண்டு அக்டோபர் 9 முதல் 20-ந் தேதி வரையும், நவம்பர் 8 முதல் 24-ந் தேதி வரையும் போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய வீரர்களை விடுவிப்பதில் சிக்கல்

இதற்கிடையே, 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கால்பந்து போட்டி வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 7-ந் தேதி வரை அரங்கேறுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டியில் 22 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி பங்கேற்கிறது. இந்திய அணியில் பெங்களூரு எப்.சி.யில் இருந்து 6 வீரர்களும், மும்பை சிட்டியில் இருந்து 3 வீரர்களும், எப்.சி.கோவா, மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், ஒடிசா, கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகியவற்றில் இருந்து தலா 2 வீரர்களும், பஞ்சாப் எப்.சி., சென்னையின் எப்.சி., ஐதராபாத் எப்.சி.யில் இருந்து தலா ஒரு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஐ.எஸ்.எல். போட்டி நடைபெறும் அதேநேரத்தில் ஆசிய விளையாட்டும் நடப்பதால் அந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் சிலரை சம்பந்தப்பட்ட கிளப் நிர்வாகம் விடுவிக்க மறுப்பதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

போட்டியை தள்ளிவைக்க பேச்சுவார்த்தை

இந்த நிலையில் அகில இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ஷாஜி பிரபாகரன் ஐ.எஸ்.எல்.. அணி நிர்வாகத்தினருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கால்பந்து அணிக்கு தேர்வாகி இருக்கும் வீரர்களை தேசத்தின் நலனை மனதில் கொண்டு கிளப் நிர்வாகங்கள் விடுவிக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே கூறுகையில், 'ஐ.எஸ்.எல். போட்டியை 10 நாட்கள் தள்ளி வைத்து அக்டோபர் மாதத்தில் தொடங்குமாறு போட்டி அமைப்பு குழுவினர் மற்றும் அணிகளின் நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன்' என்றார்.

ஐ.எஸ்.எல்.போட்டி அமைப்பு குழு நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அகில இந்திய கால்பந்து சம்மேளனம் மற்றும் அனைத்து அணிகளிடமும் கலந்து ஆலோசித்து தான் போட்டி அட்டவணை முடிவு செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் போட்டியை தள்ளி வைக்க வாய்ப்பில்லை' என்றார்.

மேலும் செய்திகள்