ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: மோகன் பகான் அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி
|ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
புவனேஸ்வர்,
10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், நேற்றிரவு புவனேஸ்வரில் நடந்த அரைஇறுதியின் முதலாவது சுற்றில் ஒடிசா எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே மோகன் பகான் வீரர் மன்வீர் சிங் கோல் அடித்தார். ஆனால் இந்த முன்னிலை சிறிது நேரமே நீடித்தது.
11-வது நிமிடத்தில் ஒடிசாவின் கார்லோஸ் டெல்கடோ பதில் கோல் திருப்பினார். பின்னர் ராய் கிருஷ்ணா (ஒடிசா) 39-வது நிமிடத்தில் கோல் போட்டார். பிற்பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படாவிட்டாலும் முரட்டு ஆட்டம் தலைதூக்கியது. டெல்கடோ (ஒடிசா), அர்மன்டோ சாடிகு (மோகன் பகான்) ஆகியோர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.
பரபரப்பான ஆட்டத்தின் நிறைவில் ஒடிசா 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகானுக்கு அதிர்ச்சி அளித்தது. மோகன் பகானுக்கு எதிராக 9-வது முறையாக மோதிய ஒடிசா அதில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இவ்விரு அணிகள் மீண்டும் அரைஇறுதியின் 2-வது சுற்றில் வருகிற 28-ந்தேதி கொல்கத்தாவில் சந்திக்கிறது. இதில் ஒடிசா டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம்.