ஐ.எஸ்.எல். கால்பந்து நாக்-அவுட் சுற்று: ஒடிசா- கேரளா அணிகள் இன்று பலப்பரீட்சை
|புவனேஸ்வரில் இன்று நடக்கும் முதலாவது நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புவனேஸ்வர்,
10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் பங்கேற்ற 12 அணிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை சிட்டி அணிகள் நேரடியாக அரைஇறுதி சுற்றை எட்டியது. 3 முதல் 6-வது இடத்தை பெற்ற எப்.சி. கோவா, ஒடிசா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், சென்னையின் எப்.சி அணிகள் நாக்-அவுட் சுற்றில் மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் புவனேஸ்வரில் இன்று நடக்கும் முதலாவது நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் ஏற்கனவே இரண்டு முறை சந்தித்து தலா ஒன்றில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.