ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே.மோகன் பகான் அணி 'சாம்பியன்'
|ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே.மோகன் பகான் அணி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.
9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஏ.டி.கே.மோகன் பகான்-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் (சமனில்) முடிந்தது. மோகன் பகான் தரப்பில் டிமித்ரி பெட்ராடோஸ் 14-வது, 85-வது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பில் கோலடித்தார். பெங்களூரு தரப்பில் சுனில் சேத்ரி 45-வது நிமிடத்திலும், ராய் கிருஷ்ணா 78-வது நிமிடத்திலும் கோலடித்தனர். வெற்றியை தீர்மானிக்க இதனையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி 4-3 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணி 4-வது முறையாக கோப்பையை தனதாக்கியது. சாம்பியன் பட்டத்தை வென்ற ஏ.டி.கே. மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெற்ற பெங்களூரு அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்பட்டன.