< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையிடம் சென்னை அணி தோல்வி
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையிடம் சென்னை அணி தோல்வி

தினத்தந்தி
|
25 Dec 2022 1:45 AM IST

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பையிடம் சென்னை அணி தோல்வியை தழுவியது.

மும்பை,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை மும்பையில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டி எப்.சி.யை எதிர் கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 34-வது நிமிடத்தில் சக வீரர் ஜூலியஸ் டக்கெர் தட்டிக்கொடுத்த பந்தை சென்னை வீரர் பீட்டர் சிலிஸ்கோவிச் கோலாக்கினார். நடப்பு தொடரில் அவரது 6-வது கோல் இதுவாகும். ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 38-வது நிமிடத்தில் மும்பையின் லாலியன்ஜூவாலா பதில் கோல் திருப்பினார். தொடர்ந்து 57-வது நிமிடத்தில் மும்பை மேலும் ஒரு கோல் போட்டது. அந்த அணியின் கிரேக் ஸ்டீவர்ட் இந்த கோல் அடித்தார்.

64-வது நிமிடத்தில் சென்னை அணியின் மாற்று ஆட்டக்காரர் அனிருத் தபா அடித்த ஷாட் மயிரிழையில் நழுவிப் போனது. முடிவில் மும்பை சிட்டி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை தோற்கடித்தது. இந்த சீசனில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான மும்பை சிட்டி 8 வெற்றி, 3 டிரா என்று 27 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. 11-வது ஆட்டத்தில் ஆடிய சென்னையின் எப்.சி. அணி 4 வெற்றி, 2 டிரா, 5 தோல்வி என்று 14 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

இரவில் கவுகாத்தியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. வெற்றிக்குரிய கோலை 69-வது நிமிடத்தில் வில்மர் ஜோர்டான் அடித்தார். 11-வது ஆட்டத்தில் ஆடிய நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி ஒரு வெற்றி, 10 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

மேலும் செய்திகள்